MY DISTRICT HISTORY
ஈரோடு
ஈரோடு வரலாறு
ஈரோடு
Hotel image
பருத்தி விளையும் பூமியில் அமைந்துள்ள ஈரோடு நகரம், பெரும்பாளையம் கால்வாய் மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகிய இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த பகுதி கி.பி.1000 முதல் கி.பி.1275 வரை சோழ மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது தாராபுரம் தலைநகராக இருந்தது.
பின்னர் இந்த பகுதி கி.பி.1276ல் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. இவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் காளிங்கராயன் கால்வாயை, வீரபாண்டிய மன்னன் வெட்டினான். பாண்டியர்களைத் தொடர்ந்து, முஸ்லிம்களும் அதன் பின்னர் மதுரை நாயக்கர்களும் இப்பகுதியை ஆண்டுள்ளனர். பின்னர் ஐதர் அலியும் திப்பு சுல்தானும் ஆட்சி செலுத்தினர். 1799ல் பிரிட்டிஷாரிடம் திப்பு சுல்தான் தோல்வி அடைந்தபோது, இந்த பகுதி, பிரிட்டிஷார் வசம் சென்றது. ஐதர் அலியின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரில் 300 வீடுகள் இருந்தன. சுமார் ஆயிரத்து 500 பேர் வசித்த இந்த நகரைச் சுற்றி கோட்டையும் 4 ஆயிரம் போர் வீரர்கள் தங்குவதற்கான பாசறைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
வடக்கில் காவிரியும் கிழக்கில் காளிங்கராயன் கால்வாயும் அமைந்திருக்க இந்த நகரைச் சுற்றி தென்னந்தோப்புகளும் வளமான நன்செய் நிலங்களும் அமைந்திருந்தன. ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற மராட்டிய, மைசூர் மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகளால் இந்த ஊர் சீரழிந்து சின்னாபின்னமாகியது. இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டதும் அமைதி ஏற்பட்டு, மக்கள் மீண்டம் இப்பகுதியில் வந்து குடியேற ஆரம்பித்தனர். ஓராண்டிற்குள் 400 வீடுகள் கட்டப்பட்டு, சுமார் 2 ஆயிரம் பேர் குடியேறினர். 1807ம் ஆண்டு இந்த பகுதியிலிருந்து ராணுவம் வெளியேறியது. 1877ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பணியாக, இந்த பகுதியில் மீண்டும் கோட்டையைக் கட்டும் பணி தரப்பட்டது.
இருப்பிடம்:
கோயம்புத்தூருக்கு கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஈரோடு நகரம். காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த நகரம், 76.21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. 1981ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரின் மக்கள் தொகை 2.48 லட்சமாக இருந்தது. ஈரோட்டில் இரண்டு பழமையான கோயில்கள் உள்ளன. ஒன்று சிவன் கோயில்; மற்றது விஷ்ணு கோயில். ஈரோடு பகுதியில் நிலப்பரப்பு, கருப்பு நிற களிமண்ணாக காட்சி அளிக்கிறது. சில பகுதிகளில் மணல் பரப்பு, கற்கள், கூழாங்கற்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. பொதுவாக கருப்பு மற்றும் செம்மண் என இருவகை நிலப்பரப்பு காணப்படுகிறது. சுண்ணாம்பு கற்களும் அதிக அளவில் கிடைக்கிறது.
தமிழகத்தின் பெரும்பாலான நகர்களைப் போலவே ஈரோடு நகரமும் வெப்பம் நிறைந்ததாக,
வறட்சியானதாகவே இருக்கும். சராசரி வெப்ப நிலை 80 டிகிரி பாரன்ஹீட் முதல் 96 டிகிரி
பாரன்ஹீட் வரை இருக்கும். ஆண்டின் மொத்த மழை அளவு 100 மி.மீ., ஈரோடு நகரின் பிரப் ரோடு மற்றும் நேதாஜி சாலைகளில் வர்த்தக நடவடிக்கை சுறுசுறுப்பாக இருக்கும். பிரதான தொழிற்சாலைகள் அனைத்தும் நகருக்கு வெளியே, பெருந்துறை மற்றும் சத்தியமங்கலம் சாலைகளில்தான் அமைந்துள்ளன. நகரில் பெரும்பாலும் எண்ணெய் மற்றும் அரிசி ஆலைகள், அவை தொடர்பான வர்த்தகம், பொறியியல் பணிகள், ஆட்டோமொபைல் மற்றும் விசைத்தறிகள் உள்ளன. இங்கு சாயப்பட்டறைகளும் உள்ளன.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது முக்கிய நகரமாக ஈரோடு
கருதப்படுகிறது. ஆண்டிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்த மாவட்டத்தில்
ஏற்றுமதி செய்யப்படுகிறது. டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ், இன்ஜினியரிங்,
ஹோசரிஸ் ஆகியவற்றிற்கு ஈரோடு பெயர் பெற்றதாகும். ஐ.டி. நிறுவனங்கள் இங்கு
அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நல்ல காலநிலையும், சிறந்த
தொழில் கட்டமைப்பும், கல்வி, மருத்துவ மையங்கள் நிறைந்த நகரமாக ஈரோடு
விளங்குகிறது.
ஈரோட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்
பின்னலாடைகள், வாசனை பொருட்கள், பருத்தி மற்றும் செயற்கை நூலிழைகள், மஞ்சள்
பொடி, ஆயத்த ஆடைகள், புளி பேஸ்ட், ஆக்டிவேட்டட் கார்பன், கிரே ஓவன் பேப்ரிக்ஸ்,
காட்டன் பேப்ரிக்ஸ், சீனி, சமையல் எண்ணெய், கிரானைட் மோனுமென்ட்ஸ், மேட் அப்ஸ்,
காட்டன் மெத்தை விரிப்புகள், ஜன்னல் திரைகள்.)
No comments:
Post a Comment
Please make your comment :