பட்டப் படிப்பை முடித்து சுமார் 15 முதல் 16 ஆண்டுகள் சொந்த ஊரை விட்டு வெளியூரில் வேலை செய்து வந்தேன். கொரோனா தொற்றுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பியபோதுதான், எனது ஊரான பெருந்துறை சிப்காட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். இங்குள்ள நிலம், நீர் மற்றும் காற்று மிகவும் மாசடைந்து, இங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் துன்பப்பட்டனர்.
நான் பெற்ற கல்வியின் மூலம் கிடைத்த அறிவால், எது நல்லது, எது கெட்டது என்று கேள்வி கேட்காமல் இருக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஒரு கட்டத்தில் தோன்றியது.
2021 ஆம் ஆண்டு முதல், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தேன். பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வரும் பல தொழிற்சாலைகள் காற்றையும், நீரையும், நிலத்தையும் மாசுபடுத்தி வருவதை இங்குள்ள மக்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன்.
பல ஆண்டுகளாகப் போராடி வரும் குழுக்களைச் சந்தித்துப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன். அவர்களின் போராட்டங்களிலும் நானும் கலந்து கொண்டேன். அவர்களும் எனக்கு ஆதரவாக நின்றனர்.
நிலம், நீர், காற்று மாசுபட்டுவிட்டது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க, அவர்கள் அன்றாடம் பார்க்கும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களைப் பகிர ஆரம்பித்தோம். பலர் உன்னிப்பாகக் கவனித்த சமயத்தில், எங்களுடைய யூடியூப் சேனலும், ஃபேஸ்புக் பக்கமும் ஒரே நாளில் முடக்கப்பட்டன.
கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்பரேட் உலகின் ஆழமான உண்மைகள் எங்களுக்குப் புரிய ஆரம்பித்தன. சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் வந்துகொண்டே இருந்தன.
என்னவென்று தெரியவில்லை, நாம் பிறந்த ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. பார்ப்போம், இந்த உலகத்தை மாற்ற முடியாது, ஆனால் சில மக்களின் மனங்களை மாற்றி நம் மண்ணுக்கு நல்லது செய்வோம்.